மேட்டூர் பகுதியிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் கல்லணை வழியாக கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம் வந்து சேர்கிறது. இந்த நீரை நம்பியே ஆண்டுதோறும் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் தேவநதி பாசன வாய்க்கால்கள் வழியாக உட்புகும் கடல்நீரானது, கடைமடைப் பகுதியான செல்லூர், பாலையூர், ஐவநல்லூர், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐந்தாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துவருகின்றனர்.
அதேபோல், கடல்நீர் உட்புகுவதை தடுக்க கடைமடைப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தற்போது நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பாலையூர் தேவநதியிலும், வெட்டாற்றிலும், கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் நன்னீரும், உவர்நீரும் பிரிக்கப்பட்டு விவசாயம் செழிக்கும் என அவர்கள் நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிமடுத்து அதனை செயல்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.