மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு பிள்ளையார் கோவில் தோப்புதெருவை சேர்ந்தவர் சரோஜா (67). இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற கணவரும், நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
சரோஜாவின் கணவர் ராதாகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த சரோஜா ஜூலை 17 ஆம் தேதி மாலை வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியே சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று (ஜூலை 18) பொறையாறு அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள வயல்வெளி பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்கள், சரோஜா தீக்குளித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பொறையாறு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சரோஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.