மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளராக விஜிகே செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
அதிமுக மயிலாடுதுறை நகர செயலாளராகவும், மாயவரம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராக பொறுப்பில் இருக்கும் விஜிகே செந்தில்நாதன், இதற்கு முன்னர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.
மேலும், குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து மூன்று முறை பதவியில் இருந்தவர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவினரே எம்எல்ஏவாக உள்ள நிலையில், இவர்களில் யாராவது ஒருவரே மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவார் என அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், விஜிகே செந்தில்நாதன் அதிமுக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.