நாகப்பட்டினம்: தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வென்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெருவாரியான வார்டுகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.
இதனையடுத்து வெற்றி பெற்றவர்கள் நேற்று (மார்ச்.2) மாநகராட்சி கவுன்சிலர்களாகவும், நகராட்சி கவுன்சிலர்களாகவும், பேரூராட்சி கவுன்சிலர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8 வார்டுகளையும், திமுக 4 வார்டுகளையும், திமுக கூட்டணிக் கட்சிகள் 2 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே இந்த தேர்தலில் 14ஆவது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அதிமுக கவுன்சிலராகப் பொறுப்பேற்ற கஸ்தூரி கலியபெருமாள் திடீர் திருப்பமாக மாலையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நாகை மாவட்ட செயலாளர் கெளதமன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நாளை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ். நடத்திய ஆலோசனை - அமமுக இணைப்பு குறித்து விவாதமா?