நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்தில் 24ஆவது குருமகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி இருக்கின்றார். இவருக்கு மெய்க்காவலராக ஜெகன்ராஜா என்பவரை தமிழ்நாடு காவல் துறையால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் திருவாவடுதுறை கடை வீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் பெண்மணி ஒருவரிடம் அண்மைக்காலமாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (மே 5) இரவு கடைக்கு வந்த ஜெகன்ராஜா அப்பெண்ணின் கடையில் நின்று பேசுவதை கவனித்த மதி என்பவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைக்கண்ட ஜெகன் ராஜா, மதியின் செல்போனை தட்டி பறித்துள்ளார்.
செல்போனை திரும்ப மதி கேட்கவே, ஆத்திரமடைந்த ஜெகன்ராஜா தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைக்கண்ட அருகில் இருந்த செல்வராஜ் என்பவர் தட்டிக்கேட்கவே, அவரது காலிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது இடது காலிலும் வலது காலிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த மதிவாணன் என்பவரையும் துப்பாக்கியைக் கொண்டு தாக்கி ஜெகன்ராஜா அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஜெகன் ராஜாவின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர்.
பின் காயமடைந்தவர்களை சிகிச்சைகாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த குத்தாலம் காவல் துறையினர் அப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் ஜெகன்ராஜாவை கைது செய்தனர்.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின் அவர் கிராம மக்களிடம் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் ஜெகன்ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விஜயகுமார் தெரிவித்தார்.