மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரில் வசித்து வருபவர் சுரேஷ் (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது நண்பர்களான பாண்டித்துரை, அரவிந்த் ஆகியோருடன் செப்டம்பர் 18ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பழையார் கிராமத்திற்குச் சென்று ஆடு ஒன்றை திருடி வந்துள்ளனர். அப்போது கூழையார் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் இருந்த அவரின் நண்பர்கள், ஆடு திருடிய சம்பவத்தை மறைக்க சுரேஷின் உடலை அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆடு திருடியதை மறைக்க பாண்டித்துரை, அரவிந்த் ஆகியோர் நாடகம் ஆடியது அம்பலமானது. இந்நிலையில் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.