நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பரதநாட்டியம் உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. 1330 திருக்குறளுக்கும் இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடினர்.
இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவில் மீண்டும் மீண்டும் 1330 திருக்குறளுக்கும் சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற அதற்கு ஏற்ப முக பாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி வருகின்றனர்.
'நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்' அமைப்பில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய குரு உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரதநாட்டிய மாணவ - மாணவிகள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி