கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு, காந்தி நகரைச் சேர்ந்த அனுசுயா என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வத்துக்கும் இடையே முகநூலில் பழக்கம் ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது, மூன்று லட்சம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் வழங்கினர்.
இதனிடையே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுடன் ஷேர் சாட் என்ற சமூக வலைதளம் மூலம் மாரிச்செல்வத்துக்கு காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அனுசுயா, தன்னை ஏமாற்றி மறுமணம் செய்த மாரிச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்களிடமிருந்து வரதட்சணை பெற்ற பணம், நகைகளை மீட்டுத்தரும்படி வேதாரண்யம் காவல் நிலையத்தில் நேற்று (ஜனவரி 12) புகார் அளித்தார். இதற்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பெற்றோருடன் நாகை ஆட்சியர் அலுவலகம் வந்த அனுசுயா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை ஆட்சியரின் ஓட்டுநர் செந்தில் என்பவர் பறித்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு சம்பவ இடம் சென்ற நாகூர் காவல்துறையினர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் அனுசுயாவிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.