தமிழ்நாட்டில் குடிசை வீடுகள் இருக்கக் கூடாது என்பதற்காக கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் ஐம்பது குடும்பத்தினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்தவித பராமரிப்புப் பணிகளும் செய்யப்படாததால் அனைத்து வீடுகளும் சிமெண்ட் காரை பெயர்ந்து இரும்புக் கம்பிகளுடன் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொகுப்பு வீடுகள் அடிக்கடி இடிந்து விழுவதால் வீடுகளில் வசிக்க அஞ்சிய மக்கள் முகப்பு மற்றும் கொள்ளை புறத்தில், கூரைக் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து வீட்டின் உள்ளே விழுந்தது. வீட்டில் யாரும் உறங்காததால் அனைவரும் காயம் இல்லாமல் தப்பித்தனர்.
வீடுகள் எவ்விதப் பராமரிப்புப் பணியும் செய்யப்படாததாலும் அவ்வப்போது இடிந்து விழுந்து வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படும் முன் அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த தயார்': விக்கிரமராஜா