நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் புரெவி புயல் காரணமாக கோயிலின் உள்ளே வெள்ளநீர் தேங்கியது. இதற்கு காரணமான வடிகாலை நேற்று (டிசம்பர் 19) கோயில் நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனைக்கவனிக்காமல் கோயில் நிர்வாகத்தினர் மூடிச்சென்றனர்.
இதையடுத்து, அதிகளவிலான குடிநீர் வெளியேறியுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வந்து அதனை சரிசெய்த நகராட்சி அலுவலர்கள், குழியை மூடாமல் அலட்சியமாக விட்டுச் சென்றனர். இந்நிலையில், நேற்றிரவு அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாலு என்பவர் அந்தக்குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் தலைகுப்புற விழுந்தார்.
இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த குடும்பத்தினர் குழிக்குள் விழுந்த பாலுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பொதுமக்கள், போக்குவரத்து நிறைந்த பகுதியில் 6அடி ஆழத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் மூடாமல் அலட்சியமாக சென்றது கண்டனத்திற்குரியது என்றும் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி