மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-இன்கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இந்த பணிக்கான ஒப்புதல் கோரி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, பாமக ஆகிய அனைத்து கட்சிகளும் புதிய பேருந்து நிலையம் திட்டத்துக்கு வரவேற்பு அளித்து பேசினர்.
மயிலாடுதுறை மக்களின் 34 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர், பேருந்து நிலையம் அமைக்க இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனம், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நகர்மன்றம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
பின்னர், நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதையும் படிங்க: 'கடலைப் பார்த்தாலே பயமாக உள்ளது...' தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மீனவர்கள் வேதனை