இதையொட்டி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் 73ஆவது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தந்த மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர்.
இதில், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் 139 பயனாளிகளுக்கு 1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் பெரம்பலூரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 123 பயனாளிகளுக்கு 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தேசிய கொடியை ஏற்றி ரூ.10.15 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் வினய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்து விவசாயிகள், தொழிலாளர்களுக்கு 30 லட்சத்து 52ஆயிரத்து 317 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்ட அளவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய அலுவலர்கள், காவல்துறையினர், சமூக சேவகர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.