தமிழ்நாட்டில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையால், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, கலவை சாதம், முட்டை உள்ளிட்டவை மதிய உணவாக வழங்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை வழங்கும் அரசு, நடைமுறை செலவுகளான காய்கறி, மளிகை, எரிபொருள் தேவைகளுக்காக, மாணவர் ஒருவருக்கு சுமார் ரூ.1.30 முதல் ரூ.1.80 வரை கிராண்ட் தொகையை நகராட்சி நிர்வாகம் வாயிலாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் கடந்த 6 மாதங்களாக கிராண்ட் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளரே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எப்படியும் மானியத் தொகை மீண்டும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பெரிய பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மாதம் ரூ.7 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஊதியமும் முறையாக வழங்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு உணவு வழங்க சொந்த பணத்தை செலவிடும் நிலைக்கு அமைப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சத்துணவு அமைப்பாளர்களின் இந்த நிலை பற்றி அறிந்த பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகளுக்கு நாள்தோறும் தடையின்றி சத்துணவு வழங்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இன்றைய சூழலில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற நிலை உள்ளபோது இது போன்ற அவல நிலை மேலும் அரசுப் பள்ளிகள் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக உள்ளது என்றும் பெரும்பாலான பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
சத்துணவு அமைப்பாளர்களிடம் பணம் இல்லாமல், அன்றைய தினம் உணவு சமைக்கப்படாவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் பெற்றோர்கள் மனதில் தோன்றிவிட்டால், எதிர்காலத்தில் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அழைத்து வருவார்களா என்பது சந்தேகமே...