மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் மெயின்ரோட்டில் இரண்டு மாடி குடியிருப்பில் வசிப்பவர் ராமதாஸ்(65). இவரது மனைவி மல்லிகா(60). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர். கடந்த 21ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகன் வித்யாசாகர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுவிட்டு இருவரும் அங்கேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் வேலை செய்யும் மூதாட்டி ஆசைரோஜா வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்புற கதவு உடைத்து திறந்து கிடந்ததையும், வாசலில் நகை பெட்டிகள் சிதறிக்கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
பீரோவிலிருந்த 8 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ், 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோப்ப நாய் , கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது