வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை கூட்டம் நாகையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க உள்ளாட்சித் துறை மூலம் ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாய் நிதியை கொண்டு தற்போது நீர்நிலை வழித்தடங்கள், ஏரி, குளம், கண்மாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய 4,399 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், அதிக பாதிப்பை சந்திக்கக் கூடிய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வீடுகளை இழந்த மக்களுக்கு மறுவாழ்வு திட்டம் என்று கூறப்படும் வீடுகள் கட்டக்கொடுக்கும் பணி செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.