தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதகாலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 8ஆம் தேதிமுதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுபிரியர்கள், அருகில் உள்ள காரைக்கால் மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருகின்றனர்.
வாகன சோதனை
காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதைத் தடுக்கும் வகையில், இரண்டு நாள்களாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவலர்கள், சேத்திராபாலபுரம் கடைவீதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மயிலாடுதுறையில் இருந்து வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தியபோது நிற்காமல் சென்றுள்ளது.
576 காரைக்கால் மதுபான (Green leaf) குவாட்டர் பாட்டில்கள்
உடனே காவலர்கள் விரட்டி சென்று ஆட்டோவை சோதனை செய்ததில், அதில் 12 பெட்டிகளில் 576 மதுபான (Green leaf) குவாட்டர் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து லோடு ஆட்டோ ஓட்டி வந்த குத்தாலத்தை சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீராம் (24), சத்தியமூர்த்தி (34), இளங்கோவன் (24) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் லோடு ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.