மயிலாடுதுறை: பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி உள்ளிட்ட 5 கிராம மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி கடந்த 14ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இதையறிந்த தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்று அவர்களைத் தடுக்க விரைந்தனர். அப்போது, நடுக்கடலில் திருமுல்லைவாசல், வானகிரி கிராம மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில், வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்ததோடு, படகுகளும் சேதமடைந்தன. இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்குமடி வலை எதிர்ப்பு 20 மீனவர் கிராம மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் வானகிரியில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 21ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவ கிராமங்கள், நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்களுக்கும், அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் எழுந்துள்ளதால், கடலோர கிராமங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், மயிலாடுதுறை ஆட்சியர் லலிதாவை 20 கிராம மீனவர்களும் சந்தித்து கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுருக்குமடி வலை விவகாரம் - மீனவர்கள் பேச்சுவார்த்தை