நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (58). இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கிராம நாட்டாமையாக இருந்துள்ளார். மேலும், அதிமுக கிளைச் செயலாளராக இருந்தார். இளங்கோவன் தொடர்ந்து கிராம நாட்டமையாக நீடிக்க அதே தெருவைச் சேர்ந்த கண்ணதாசன், சேட்டு என்கின்ற முருகையன், வேல்முருகன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் ஒரு தரப்பினரைச் சேர்ந்த பெண்ணை, மறு தரப்பினர் கிண்டல் செய்ததால் கடந்த மார்ச் 18ஆம் தேதி இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அதில் இரண்டு தரப்பிலும் தலா இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்து, ஒரு மாதமாக காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தனர்.
மக்களவைத் தேர்தலில் இளங்கோவன் தரப்பினர் அதிமுகவிற்கும், வேல்முருகன் தரப்பினர் திமுகவிற்கும் பணியாற்றியதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கீழத்தெரு கோவில் அருகே இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த தங்கமணி (32), இளவரசன் (36), எழிலரசன், இளையராஜா, பாலு, சம்பந்தம், பிரபாகரன், பூமிநாதன், பிரேம் குமார் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கண்ணதாசன், சேட்டு என்கின்ற முருகையன், வேல்முருகன், கண்ணதாசனின் மகன்களான திருமுருகன் (32), வினோத் (24), விக்னேஷ் மற்றும் மான்சிங் (29), கஜேந்திரன் (58) உள்ளிட்ட 20 பேர் இளங்கோவன் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் கண்ணதாசன் தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு இளங்கோவன் தரப்பினரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனைவரும் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
இதில் தங்கமணி (32), இளவரசன் (36) இருவரும் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். பிரச்னை மேலும் தொடராமல் தடுக்க காவல் துணை கண்காணிப்பாளர்கள் வெள்ளத்துரை, சுவாமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நீடூர் கீழத்தெரு பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருமுருகன், வினோத், மான்சிங், கஜேந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல் காரணமாக நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.