நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் கோடிக்கரையில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் செந்தில்குமார்(38) என்பவருக்கு சொந்தமான படகில் செந்தில்குமார், சிவக்குமார்(50), மதன்(20) மற்றும் நித்தியானந்தம்(16) ஆகிய நான்கு பேரும் நேற்று (நவ.3) பிற்பகல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், இந்திய எல்லையில் இன்று (நவ.4) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை உருட்டு கட்டைகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் திடீரென தாக்கினர். அதோடு தமிழக மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதனால், காயமடைந்த மீனவர்கள் கோடியக்கரை மீன்பிடி படகு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். மேலும் அவர்களுக்கு கோடியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மருத்துவ வசதியை முன்னிட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்களால், தமிழக மீனவரான செந்தில் குமார் என்பவருக்கு தலையிலும், மதன் என்பவருக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், இலங்கை மீனவர்களால் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருவதாகவும்; இதற்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் நிலநடுக்கம்! 140 பேர் உயிரிழப்பு! டெல்லி, பீகாரில் உணரப்பட்ட நிலநடுக்கம்!