நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகளில் 1,872 மதுபாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மதுபாட்டில்கள், சாராயம், காரை பறிமுதல் செய்து, ஆக்கூரை சேர்ந்த கார் ஓட்டுநர் சங்கர், உடனிருந்த கனி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், விற்பனைக்காக காரைக்காலிலிருந்து கும்பகோணத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும், ஆக்கூரை சேர்ந்த பாபுராஜ் என்பவருக்காக கடத்தி சென்றதாகவும் கைதானவர்கள் கூறினர். இதற்கிடையே, பாபுராஜ் அண்ணன் ராஜூ என்பவர் தொடர்ந்து சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் சாராய கடத்தலில் ஈடுபடுவதால் காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.