சென்னையில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அப்போதைய தென்னக ரயில்வே, இருப்புப்பாதை அமைத்தது.
அந்த வகையில் மயிலாடுதுறை-தஞ்சாவூர் இருப்பு பாதை அமைக்கும் பணி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முடிவடைந்து, முதன்முதலாக ரயில் வண்டிகள் இயக்கப்பட்டன. இந்தத் தடம் அன்றைய காலகட்டத்தில் சென்னையையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் ஒரே முக்கிய ரயில் பாதையாக இருந்ததால் இப்பாதை இன்றளவும் மெயின் லைன் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
ரயில் சேவை தொடங்கி இன்றோடு 145ஆவது ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நாளை நினைவுக்கூரும் விதமாக மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடையில் அம்மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர். பயணிகள், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு இவ்விழாவில் இனிப்புகள் வழங்கப்பட்டன.