மயிலாடுதுறை: இந்த, 26,500 அரிசி மூட்டைகள் 69 லாரிகள் மூலம் மயிலாடுதுறை தமிழ்நாடு அரசு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து நாடு முழுவதும் அரிசியை அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பு திட்டத்தின் கீழ் மூன்று விதமான திட்டங்களுக்காக கிலோ ஒன்றுக்கு ரூ.2, ரூ.5.65, ரூ.8.35 ஆகிய விலைகளில் அரிசியை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சுல்தான்பேட்டை என்ற இடத்தில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கிலிருந்து 1,317 மெட்ரிக் டன் அரிசி (26,500 புழுங்கல் அரிசி மூட்டைகள்) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை ரயில் மூலம் நேற்று (மே.16) மயிலாடுதுறை ரயில் நிலையத்தை வந்தடைந்தன.
இந்த அரிசி மூட்டைகள், தஞ்சாவூர் இந்திய உணவுக்கழக அலுவலர்கள் முன்னிலையில், 69 லாரிகள் மூலம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உணவு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி அரசு கிடங்கில் 12 ஆயிரம் டன் புழுங்கல் அரிசி இருப்பில் உள்ளது. தஞ்சாவூர் இந்திய உணவுக் கழக அலுவலர்கள் மேற்பார்வையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டுனர், சுமை தூக்குவோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சி குழு: தமிழ்நாடு அரசு அதிரடி!