மயிலாடுதுறை மாவட்டம், ஐவநல்லூர் ஊராட்சி குத்தகை வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(45). விவசாயியான இவர், குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது தாயார் பானுமதி (70) மட்டும் தனியே இருந்துள்ளார்.
அப்போது, முத்துக்குமரனின் நண்பர் என்று கூறி வந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டில் உள்ளவர்களை தெரிந்தவர்களைபோல் விசாரித்து பேசியதுடன், பானுமதியிடம் வீடு குடிபோக செம்பருத்தி இலை வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்ட பானுமதி செம்பருத்தி இலையை பறிக்க தோட்டத்திற்குச் சென்றுள்ளார். இதனிடையே, அந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை திறந்து, அதிலிருந்த 10 சவரன் தங்க நகை, ரூ.90 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, வீட்டின் உள்ளே வந்த பானுமதி பூட்டிய பீரோ திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தனது மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த முத்துக்குமரன் நகை, பணம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டிகளைக் குறிவைக்கும் நூதன திருடன் கைது!