மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இதனிடையே வீட்டில் கைவினைப் பொருள்கள் செய்துவருகிறார். அந்த வகையில், வீட்டிலுள்ள பல்வேறு வகையான கழிவுப் பொருள்களை வைத்து தங்கக்குதிரையில் கள்ளழகர், மயிலில் முருகன் என்று பல்வேறு கடவுள் சிலைகளை தத்ரூபமாகவும், நேர்த்தியோடும்செய்து அசத்திவருகிறார். இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு கணேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார்.
கழிவு பொருள்களில் அற்புதம்: "எனக்கு கைவினைப் பொருள்கள் செய்வதில் அலாதியான விருப்பம். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடந்த 2 ஆண்டுகளாகவே எனக்குள் இருந்தது. அதனை இந்தாண்டு செய்துள்ளேன். இதுபோன்ற சிலை வேறெங்கும் விற்பனை செய்யப்படாது. கடந்த ஒரு வாரமாக கடுமையாக உழைத்து கள்ளழகர் சிலையை செய்துள்ளேன். குதிரையை தெர்மகோல் மூலம் வரைந்து 2 டி உருவத்திலிருந்து 3 டிக்கு மாற்றினேன்.
இந்த அழகர் சிலை முழுவதுமாக சோப்புத் தூள் கொண்டு வடிவமைத்தேன். இதுபோன்ற வடிவமைப்புகளை மேற்கொள்ள அதிகமாக செலவு செய்வதில்லை. வீட்டிலிருக்கும் பழைய துணிகள், பஞ்சு, கார்ட்போர்டு, தெர்மாகோல், செய்தித்தாள்கள் கொண்டே செய்து முடிப்பேன். இதற்கான மூலப்பொருள் வீட்டிலுள்ள சோப்பை தூளாக்கி, அத்துடன் சோளமாவு, ஃபெவிகால், கலந்தால் கிடைத்துவிடும். அதனை வைத்து உருவங்களை செய்துவிடுவேன்" என்றார்.
அழகர் மட்டுமன்றி, தனது குடும்பத்தார் வணங்கக்கூடிய அனைத்துக் கடவுள்களின் உருவங்களையும் கைவினைத் திறனால் உருவாக்கி வைத்துள்ளார் கணேஷ்குமார். கிருஷ்ண ஜெயந்தியின்போது கிருஷ்ணர் சிலை, தை பூசத்தில் மயில் மேல் அமர்ந்து செல்லும் உருவில் முருகன் சிலை உள்ளிட்ட சிலைகளையும் செய்துள்ளார்.
நிறைவேறிய ஆவல்: இதைத்தொடர்ந்து கணேஷ்குமார் கூறுகையில், “என்னுடைய இந்த முயற்சிக்கு எனது தந்தை, தாய், சகோதரர்கள் ஊக்கமளித்துவந்தனர். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதிருந்தே இந்தக் கலையின் மீது ஆர்வம் வந்துவிட்டது. தொடக்கத்தில் பென்சில் டிராயிங் மூலம் வரைய ஆரம்பித்து, காலப்போக்கில் சிலையாக செய்ய முயற்சித்தேன்” என்றார்.
அதுமட்டுமல்லாமல், இதுபோன்று கைவினை பொருள்களை செய்யும்போதும், ஓவியம் வரையும் போதும் மனநிலை மேம்படுவதாகக் கூறுகிறார் கணேஷ்குமார். இந்தக் கலைத்திறனை அக்கம் பக்கம் குழந்தைகளுக்கும் கற்றுத்தர மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்.
இதையும் படிங்க: 'அலங்காரப் பிரியர் மட்டுமல்ல... சமத்துவ நாயகரும்கூட...' - கள்ளழகரின் மற்றொரு பக்கம்!