மதுரை மாவட்டம் மணிநகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மஞ்சுளா தம்பதியின் மகன் சங்கர் (17). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, சங்கர் தனது நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது, சங்கர் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த 20ம் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக சங்கர் தேடப்பட்ட நிலையில் இன்று, இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கடலில் முத்தெடுக்கும் ஐந்து மீனவ இளைஞர்கள் சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த இளைஞர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்ட சில நிமிடங்களிலயே துரிதமாக செயல்பட்டு செல்லூர் பாலத்தின் கீழ் உயிரிழந்த நிலையில் சங்கரின் சடலத்தை மீட்டனர். தற்போது வைகை ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்து செல்வதால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதே இதுபோன்ற தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!