மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணியப்பன். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவையும், இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் ஆகிய மூன்று மகன்களும் இருந்துள்ளனர். இவர்கள், குடும்பத்துடன் வாழைத்தோப்பு பகுதியிலுள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த மாதம் இதயக்கனி, அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிருமியை காதலித்து, வெளியூர் அழைத்துச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இதயக்கனியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்காக இதயக்கனியின் சகோதரர்கள் சந்தோஷ், ரமேஷ் ஆகியோரை காவல் துறையினர், அடிக்கடி அழைத்து சென்று விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்றிரவு (செப்டம்பர் 16) ரமேஷை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் மறுநாள் காலை ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார், ரமேஷ் குறித்து காவல் நிலையத்தில் விசாரித்தனர். அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் ரமேஷை அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனிடையே ரமேஷ் அப்பகுதியிலுள்ள மலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற குடும்பத்தினர், ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பாதவும், விசாரணையின் போது காவல் துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி, உடலை மீட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் தலைமையிலான காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் துறை எச்சரித்ததால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!