மதுரை: அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் வீடு, கடைகளின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டது.
அந்தப் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வாகனங்களைத் திருடிச் செல்லும் திருட்டுக் கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் அலங்காநல்லூரில் ஒரு கடை முன் நிறுத்தப்பட்டிருந்த கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
காவல் துறையிடம் சிக்கிய இளைஞர்
அதனடிப்படையில், இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்லும் இளைஞர்களைத் தனிப்படை காவல் துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், இருக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் பாண்டி (20) என்ற இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பின்னர், அவரிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், தப்பியோடிய மற்றொரு இளைஞரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளை