மதுரையைச் சேர்ந்தவர்கள் சுகன்யா மற்றும் திருநங்கையான பியூலா. இருவரும் 10ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தபோது பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. இதை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் தகாத நட்பு கூடாது என்றுக் கூறி இருவரையும் பிரித்தனர்.
இதனை தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு சுகன்யாவிற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சுகன்யாவின் கணவர் ராஜேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி வீட்டில் முடங்கியுள்ளார்.
இதனால் சுகன்யா தனது பழைய காதலியான பியூலாவுடன் சேர்ந்து வாழ முடிவு அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்த போது அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஆணாக மாறுவதற்காக பியூலா புதுச்சேரியில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.
மேலும் பியூலா தன் பெயரை ஜெய்சன் ஜோஸ்வா என மாற்றிக்கொண்டு சுகன்யாவுடன் குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனது முதல் கணவரின் குழந்தையை பெற்றுத் தரக்கோரி இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து சுகன்யா கூறுகையில், "திருமணமானது முதல் கடுமையான கொடுமைகளை எனது கணவரிடம் அனுபவித்து வந்தேன். ஆனால் தற்போது எனது பழைய நண்பரான ஜெய்சன் ஜோஸ்வாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறேன். மதுரையில் உள்ள பிரபல மாலில் விற்பனையாளராக நானும், பாதுகாவலராக ஜெய்சனும் பணியாற்றி வருகிறோம். எனது குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளோம்" என்றார்.