மதுரை மாநகர் வடம்போக்கித் தெருவில் உள்ள ஜவுளிக்கடைக்கு சேலை எடுப்பதாகக் கூறி ஐந்து பெண்கள் வந்துள்ளனர். நீண்ட நேரமாக சேலைகளை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அந்த பெண்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள், அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அதில் ஐந்து பெண்களும் தங்களது ஆடைகளுக்குள் 20-க்கும் மேற்பட்ட சேலைகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அப்பெண்களை கையும் களவுமாக பிடித்து தெற்குவாசல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்தனர். அப்போது பெண்கள் திருடியது உறுதியானது.
விசாரணையில் ஐந்து பெண்களும் உசிலம்பட்டி அ.கொக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி, சுசிலா, செல்வி உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நூறு கோடி ரூபாய் மதிப்பு சேலைகள் தேக்கம்: ஊரடங்கில் உற்பத்தியாளர்களின் அவலநிலை