மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கண்ணன் என்பவர் மாசி மகா விழாவுக்கு கும்பகோணத்திற்கு உள்ளூர் விடுமுறை விடவும், மதுக்கடைகளை மூட கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனுவில், "தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள் 5 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது.
மாசி மகாமக திருவிழாவின்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கும்பகோணத்திற்கு பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அப்போது சட்ட விரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதன் சுற்றியுள்ள டாஸ்மார்க் கடைகளை மூடவும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை மாசி மகாமக திருவிழாவில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படவில்லை. எனவே, கும்பகோணம் மாசி மகா மக திருவிழாவில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும், உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், " திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது"? இதற்கு அரசாணை ஏதேனும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் அரசாணையின் அடிப்படையில் திருச்செந்தூர் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுரையிலும் இதுபோன்ற நடைபெற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் கரடி உலா!