மதுரை : உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 60 சுற்றுலா பயணிகள் ஐஆர்சிடிசி மூலம் சுற்றுலா ரயில் பெட்டி முன்பதிவு செய்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்தனர். நாகர்கோவில் பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சுற்றுலா பயணிகள், தொடர்ந்து ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு இன்று (ஆகஸ்ட். 26) அதிகாலை வந்து உள்ளனர்.
இணைப்பு ரயிலுக்காக பயணிகள் காத்திருந்த நிலையில், சுற்றுலா பெட்டி மதுரை ரயில் நிலையத்திற்கு சற்று வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, ரயிலில் பயணித்த பயணிகள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ரயிலில் சிறிய வகையிலான சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சமைத்தததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியதில் ரயில் பெட்டியின் நாலாபுறமும் தீ பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ வேகமாக பரவியதை அடுத்து ரயிலில் இருந்த பயணிகள் சிலர் உடனடியாக கீழே இறங்கி உள்ளனர். மேலும் சிலர் பெட்டியில் சிக்கிக் கொண்ட நிலையில், ஏறத்தாழ 9 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அந்த அறிக்கையில், "அதிகாலை 3.47 மணிக்கு ரயில் மதுரை ரயில் நிலையத்தை அடைந்ததாகவும், காலை 5.15 மணிக்கு சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக அறியப்பட்ட நிலையில், உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 05.45 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், காலை 7.15 மணிக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீ விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், ரயில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே இருந்த குடியிருப்புவாசிகள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ரயில் பெட்டியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ரயில் ராமேஸ்வரம் சென்று திரும்பிய பின்னர் நாளை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டு சென்னைக்கும், பின்னர் அங்கிருந்து லக்னோவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்ததாக ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சம்பவ இடத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா, ரயில்வே கோட்ட அதிகாரிகள், மதுரை ரயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க : Madurai Train Fire Update : உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் தீ விபத்து - 9 பேர் பலி!