மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கண்மாய்கள், குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டிவருகின்றன. அந்த வரிசையில், பெரியார் நகர் பகுதியில் அமைத்துள்ள கரிசல்குளம் கண்மாயில் நீரின் கொள்ளளவு அதிகரித்து மடை உடையும் அபாயத்தில் உள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை அலுவலர்களுக்குப் பலமுறை தகவல் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்மாயில் நீர்ப்பிடி குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று, மதுரை - தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச் சாலையில் திடீரென அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல் துறையினரும், சிலைமான் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், மடையைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்துசென்றனர்.