மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும், நிப்போன்சான் மயஹோஜி என்னும் ஜப்பானிய புத்த சமய இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் உலக அமைதி மற்றும் அகிம்சையை வலியுறுத்தி காந்திய வழியில் நடைபயணம் நடைபெற இருக்கின்றது.
இது தொடர்பான செய்தியாளர் கூட்டம் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் கூட்டத்தில் காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கே.ஆர்.நந்தாராவ், பொருளாளர் வழக்கறிஞர் மா.செந்தில் குமார். கல்வி அலுவலர் இரா.நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் முனைவர் ஆர்.தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
280 கி.மீ நடைபயணம்: பொருளாளர் செந்தில்குமார் கூறுகையில், “மகாத்மா காந்தியடிகளின் 75ஆவது நினைவு ஆண்டினை முன்னிட்டும் 154ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் இந்த உலக அமைதி நடைபயணம் நடைபெறுகின்றது. இந்த அமைதி நடை பயணத்திற்கு நிப்போன்சான் மயஹோஜி தமிழ்நாடு பிரிவின் தலைமை புத்தபிட்சு அருட்திரு இஸ்தானி தலைமை வகிக்கிறார்.
செப்டம்பர் 15ல் கன்னியாகுமரியில் தொடங்கி சங்கரன்கோவில் வழியாக 280 கிலோ மீட்டர் பயணம் செய்து அக்டோபர் 2ம் தேதி இந்த அமைதி நடைப்பயணம் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அடைகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் தொடங்கும் இந்த அமைதி நடைப் பயணம் சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பனகுடி, நாங்குநேரி, மூன்றடைப்பு.
திருநெல்வேலி, மானூர், அழகிய பாண்டிபுரம், வீரீருப்பு, சங்கரன்கோவில், கரிவலம் வந்த நல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், அம்மாபட்டி, கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அடைகிறது. இந்த அமைதி நடைப் பயணத்தில் ஜப்பான் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து புத்தபிட்சுகள், இத்தாலி நாட்டவர், காந்திய சர்வோதய அன்பர்கள் என 20 பேர் கலந்து கொள்கின்றனர்.
சிலை திறப்பு விழா: மகாத்மா காந்தியடிகளின் ஆடைப் புரட்சி தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23ல் சங்கரன்கோவில் அருகிலுள்ள வீரிருப்பில் 120அடி உயர உலக அமைதி கோபுர வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்படுகிறது மற்றும் 'பியூஜி குருஜி- காந்திஜி' கண்காட்சி கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
இந்த உலக அமைதி நடைப் பயணத்தை முன்னிட்டு செப்டம்பர் 29ல் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து பள்ளி மாணவ மாணவியருக்கு ஓவியப் போட்டியும், கல்லூரி மாணவ மாணவியருக்கு கட்டுரைப் போட்டியும் நடைபெறவிருக்கின்றன.
ஓவியப் போட்டி: அக்டோபர் 2ஆம் தேதி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உலக அமைதி நடைப்பயணத்திற்கு வரவேற்பும், நிறைவு விழாவில் பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வும் நடைபெறவிருக்கின்றன. மேலும் அன்று மாலையில் நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் காந்தி ஜெயந்தி போட்டிகளில் சிறப்பாகப் பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கும் விழாவும், காந்திய சிந்தனை சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறவிருக்கின்றன” என்றார்.
இதையும் படிங்க: Aditya L1 update: 3 மாதத்தில் சூரியனில் நடக்கும் நிகழ்வு வெளியாகும் - மயில்சாமி அண்ணாதுரை கொடுத்த அப்டேட்!