மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விபட்டியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து எட்டு லட்ச ரூபாய் செலவில் உயர் மின்னழுத்த கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டில் பெருகிவரும் மதுக்கடைகள் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறிய கருத்தின்படி, எடப்பாடி அரசு மது அரசாகத்தான் உள்ளது. மாநில அரசு மத்திய அரசின் ஆர்எஸ்எஸ் கைப்பாவையாகச் செயல்படுகிறது.
மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர் ஆர்எஸ்எஸ் ஆள்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு செயல்படுகிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "மத்திய அரசு கொண்டுவந்த வரி விதிப்புக் கொள்கையினால் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை எட்டியது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் பெட்ரோல் விலையை குறைக்கும் எண்ணம் மட்டும் வருவதே இல்லை" என்று பதிலளித்துள்ளார்.
மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது குறித்த கேள்விக்கு, "தேர்தல் நெருங்கும் நேரத்தில் துரோகிகள் விலகிச் செல்கிறார்கள்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து சிபிஐ ரெய்டுக்குப் பயந்து செல்கிறார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க; அரசியலமைப்பிற்குட்பட்டு பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சர் நாராயணசாமி