மதுரையில் முக்குறுணி விநாயகர் சிலை மிகச் சிறப்பு வாய்ந்தது. ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது இந்த சிலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டு 18 படி பச்சரிசி கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி இன்று(ஆக.22) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு படைப்பதற்காக 18 படி பச்சரிசி, வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் ஆகியவை கலந்த கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.
பின்னர் கொழுக்கட்டையை மூங்கில் கூடையில் வைத்து சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் தோளில் தூக்கி வந்தனர்.
இதையடுத்து, முக்குறுணி விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சன்னதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் போன்றவை நடைபெற்றது.
மேலும் மதுரையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் கரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதையும் படிங்க: மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள்!