அமெரிக்காவின் சிலிக்கானை மையமாகக்கொண்டு 61 நாடுகளை உள்ளடக்கிய டைய் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் 27ஆவது 'டைய்கான் 2020' எனும் மாநாடு நடைபெற்றது.
இதில் சென்னையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரையிலிருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 22 நாடுகளைச் சேர்ந்த 4,500 முதலீட்டாளர்கள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனர்.
அப்பொழுது ஒவ்வொரு நாட்டின் இடையே செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும்வகையில் சென்ற ஆண்டு முதலமைச்சர் தலைமையில் சுற்றுப்பயணம் செய்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இது குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளை அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட், தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு ஜி.பி.பி.எஸ். வேகத்தில் இணைய வசதி கொடுக்கப்படும். கிராமங்கள் தோறும் அதிவேக இணைய வசதி பெறுவதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
அரசு கிராமப்புற இளைஞர்களின் திறனை உலகளாவிய அளவில் எடுத்துச்செல்ல நடவடிக்கைகள் அரசு எடுத்துவருகிறது. உலகளாவிய தகவல் தொழில்நுட்ப போட்டியை கிராமப்புறங்களிலிருந்து இளைஞர்கள் எதிர்கொள்ள பயிற்சிகள் கொடுக்க திட்டமிட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பொதுமக்கள் 100 மடங்கு கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்