மதுரையில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. வியாபாரிகளின் கோரிக்கை கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான், ஆனால் அதை அரசு கண்டுகொள்ளவில்லை.
சாலை விரிவாக்கத்திற்கு ஒரு லட்சத்து மூன்றாயிரம் கோடியில் புதிய சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, சுங்கச்சாவடி கட்டணம் மூலமாகப் பணத்தை வசூலிக்கும் திட்டமாகத்தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயரும் வகையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துப் பொருள்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த வணிகர்களை ஏமாற்றியிருக்கிறது.
எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதால் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் கால்பதிக்கும் நிலை உள்ளது. உள்நாட்டுப் பெரிய நிறுவனங்கள் சிறு வணிகங்களில் புகுந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவருவதற்கு மத்திய அரசு உதவியாக இருக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. வேளாண் சட்டம் என்பது கார்ப்பரேட்டுகளை ஊக்குவிக்கும் சட்டம். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதைக் கருத்தில் வைத்து, இப்படி ஏமாற்றிபேசுகிறார் எனத் தெரியவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை ஆளுநர் குறை சொல்லமாட்டார்.
வியாபாரிகள், விவசாயிகள், சாமானியர்கள் தேவையில்லை என்ற எண்ணத்தோடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு உள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவுதான். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமருக்கு தயக்கம் ஏன்?" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சாமானிய மக்களுக்கானது அல்ல, பெருநிறுவனங்களின் பட்ஜெட்- பினராயி விஜயன்!