சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'.
இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது. இந்நிலையில், 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் (மார்ச் 3) 50ஆவது நாளை கொண்டாடுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #Master50thday என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.
இதனையடுத்து மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களை விஜய் ரசிகர்கள் அப்பகுதியில் உள்ள திரையரங்குக்கு இலவசமாக அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 'மாஸ்டர்' திரைப்படத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து திரையரங்க வளாகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கேக் வெட்டியும், திரையரங்கிற்கு வந்த பார்வையாளர்களுக்கு மரக்கன்றுகள், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.