மதுரை: நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'லியோ' (Leo) திரைப்படம், இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்திருந்த நேரத்தில் திடீரென ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இச்சூழலில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ரத்தானதால் விஜயின் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன இந்நிலையில் அதற்கு வேறு சில அரசியல் அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடியோ ரத்து அறிவிப்பில் அரசியல் அழுத்தம் எதும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் X வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தது. ஆனாலும், விஜய் ரசிகர்கள் ஆளும் கட்சியை சீண்டும் வகையில் ட்விட்டரில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் வித்தியாசமான வகையில் சுவரொட்டி ஒன்றை ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். விஜயின் அரசியல் நுழைவு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மதுரை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், தனியார் செய்தித்தாள் வடிவில் இந்த சுவரொட்டியை வடிவமைத்துள்ளனர்.
அதில் விஜய் தலைமையில் டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை, ஜான்பாண்டியன் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போட்டோ ஷாப் செய்துள்ளனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில், தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததாகவும், மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்றும் மக்கள் பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தொடந்து, தொலைப்பேசியில் இந்திய பிரதமர் விஜய்க்கு வாழ்த்து கூறியதாகவும், பதவியேற்பு விழாவுக்கு மோடி தமிழ்நாடு வருதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லியோ பட டிக்கெட் புக்கிங் ஓபன் எப்போது? - வெளியான புதிய தகவலால் ரசிகர்கள் குஷி!