மதுரை: மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கும் விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை சேர்ந்த வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "இதற்கு முன் விக்டோரியா கௌரி போன்று தேர்வு செய்யப்பட்ட பல நீதிபதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்ற கொலீஜியம் தற்போது விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர். தற்போது அவர் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் ஆக இருந்து வருகிறார்.
விக்டோரியா கௌரி , துணை சொலிசிட்டர் ஜெனரல் ஆக கடினமாக உழைத்து வருகிறார். ஆனால், அவர் அரசியல் பின்புலத்தின் மூலம் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிறப்புப் பிரிவு காவல்துறை, புலனாய்வுப் பணியகம் போன்ற மாநில மற்றும் மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் நீதிபதிகளாக நியமனம் செய்யாமல் அரசியல் பின்புலத்தின் மூலம் நியமனம் செய்வது சரியானதாக இருக்காது. தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி நீதிபதிகளை நியமிக்க முயல்கிறது.
எனவே, மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கும் விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்கும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதத்தை நிராகரிக்குமாறும், விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும்" என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலுள்ள மூத்த வழக்கறிஞர்கள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Mumbai terror alert:NIA-க்கு தலிபான் பெயரில் இ-மெயில்; மும்பை போலீசார் உஷார்