ராமநாதபுரம் மாவட்டம் இடையர்வலசையைச் சேர்ந்த பூமிதாசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
நான் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். ராமநாதபுரம் டவுன் வெளிப்பட்டினம் பகுதியில் வீரபத்திரசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிர்வாகத்தில் உறுப்பினராக உள்ளேன். இந்நிலையில் இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 2 ஏக்கர் 90 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளனர். தற்போது இந்த நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
மோசடி செய்யும் நோக்கத்தில் சிலர் அப்பகுதியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதற்குத் தடை விதிக்கவும், கோயில் நிலத்தை மீட்டு மீண்டும் வீரபத்திரசுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அலுவலர்களுக்கு அனுப்பிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று (பிப். 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு குறித்து, அறநிலையத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணையை மார்ச் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கடலூரில் காணாமல்போன குழந்தை புதுச்சேரியில் மீட்பு