தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் புதூர் பேரூராட்சியில் முன்கள பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிலையில் இவர் கடந்த 30ஆம் தேதி வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உறவினர்கள், தடுப்பூசி போட்டதன் காரணமாகவே மனோகரன் உயிரிழந்தார் எனக் கூறியதோடு, அவரது சடலத்தை வாங்கவும் மறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் துப்புரவு பணியாளரின் உடலை, ஜிம்பர் அல்லது எய்மஸ் மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து, அவரது இழப்பிற்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடவேண்டும்.
மேலும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என அவரது மனைவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2015ஆம் ஆண்டு உடற்கூறு ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை பின்பற்றாமல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவர் குழு அமைத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் 2015ஆம் ஆண்டு விதிமுறைகளை பின்பற்றி உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருந்தால் அதற்கான தகவலை நாளை (பிப்.5) தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர்.