மதுரை யானைமலை ஒத்தக்கடையில் மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க.சார்பில் *உங்கள் தொகுதியில் ஸ்டாலின்* நிகழ்வு நேற்று (பிப்.18) நடைபெற்றது. மதுரை புறநகர் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கே.என்.நேரு,பொன். முத்துராமலிங்கம்,சட்டப்பேரவை உறுப்பினர்களான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், டாக்டர்.சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
நிகழ்ச்சியில் பேசிய மு.க ஸ்டாலின்,
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திருவண்ணாமலையில் 29ஆம் தேதி துவங்கி 3 கட்டங்களாக 110 சட்டமன்ற தொகுதிகளில் நிகழ்ச்சியை நடத்தி முடித்து, 4ஆம் கட்டமாக மதுரையில் துவங்கி உள்ளோம். 6 நாள்கள் 4ஆம் கட்ட சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது.
நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் டோல்கேட் வரைமுறைப்படுத்தப்படாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பல பேர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறுவதற்கு மிக விரைவில் தி.மு.க. போராட்டங்களை முன்னெடுக்கும் அதற்கும் தீர்வு ஏற்படாவிட்டால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும்.
தற்போதைய தமிழ்நாடு அரசு பழைய கட்டிடங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து இதுதான் மினி கிளினிக் என திறந்து வருகிறது, இது கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போன்று உள்ளது. மதுரை மண்ணில் 7 மைல் தூரம் ஊர்வலம், 9 மணி நேரம் நடந்தே சென்று ஊர்வலம் போன்ற சாதனைகளை மதுரையில் படைத்தது தி.மு.க.
மதுரையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேச நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன், காரணம் மதுரை சிம்மக்கல்லில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை திறக்கப்பட்டதால்தான்; நம்முடன் உயிராக இருந்தவர் இன்று சிலையாக உள்ளார். நமக்கு ஊக்கமாக இருந்தவர் இன்று சிலையாக உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அமைத்து கொடுத்தவர் கலைஞர், மானம் காத்த மாமன்னர் மருதுபாண்டியருக்கு சிலை, பரிதிமாற் கலைஞர் சிலை, மதுரையில் பல்வேறு மேம்பாலங்கள், 120 கோடி ரூபாய் செலவில் சர்வதேச விமான நிலையம் அமைத்தது தி.மு.க. தலைவர் கலைஞர் அரசு. ஆனால் அதிமுக அரசால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கூட கொண்டு வர முடியவில்லை
இதற்கிடையில், சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலையை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் வளர்ச்சி பெறும்: முதலமைச்சர்