இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ளன. மேலும், கடந்த ஒரு மாத காலத்தில் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளின் விவரங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி சுகாதாரத் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். அதில், கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடுகளிலிருந்து மதுரைக்கு 2 ஆயிரத்து 900 பயணிகள் வந்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 28ஆம் தேதி லண்டனிலிருந்து மதுரை வந்த தவுடு சந்தை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு எந்த வகையான கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய, அவரின் மாதிரி பூனாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
லண்டன், இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.