ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ’ராஜபாளையம் நகரில் வீட்டு வரி, தொழில் வரி, தொழிற்சாலை வரி, வணிக வியாபாரிகள் வரி, காலிமனை வரி என மொத்தம் 52 ஆயிரம் வரி செலுத்துபவர்கள் உள்ளனர். நகராட்சியாக உள்ள ராஜபாளையம் அதிக வரி வசூல் செய்து வருவதைக் கண்டித்து பொதுமக்களும் வியாபாரிகளும் மாபெரும் போராட்டங்களை செய்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி ஆணையரிடம் நேரில் முறையிட்டும் வரியைக் குறைக்கவில்லை. ஆனால் வரி வசூல் செய்வதற்காக நகராட்சி கழிவுநீர் வடிகால் வசதிகளை செய்யாமலும், சில இடங்களில் குப்பைகளை எடுக்காமலும் நகராட்சிப் பணியாளர்கள் அடாவடியாகவும், அசிங்கமான வார்த்தைகளை பேசியும் வருகின்றனர். ராஜபாளையத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில் வாசலில் வரி செலுத்தவில்லை எனக் காரணத்தை கூறி, மாணவர்கள் சென்று வரும் வழியில் குப்பைத் தொட்டியை வைத்துள்ளனர்.
இதே போன்று விவேகானந்தர் தெருவில் உள்ள ஒரு தனியார் மழலை பள்ளி முன்பு நகராட்சியே, குழந்தைகள் சென்று வரும் பாதை முன்பு குப்பைத் தொட்டிகளை வைத்துச் சென்றுள்ளது. இந்த குப்பைத் தொட்டிகளில் கோழி இறைச்சி, மீன் இறைச்சி போன்றவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வரி செலுத்தவில்லை என்றால் ஜப்தி செய்யும் உரிமை நகராட்சிக்கு உள்ளது. ஆனால், இதுபோன்று நோய் பரப்பும் வகையில் அதுவும் பள்ளிக்கூட வாசலிலேயே குப்பைத் தொட்டியை வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்தும் குப்பைத் தொட்டியை அகற்றவும் நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ‘வரி வசூல் செய்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதனை விட்டுவிட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூட வாசலில் சுகாதாரமற்ற வகையில் குப்பைத் தொட்டியை வைத்தது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் முறையாக வரியை வசூல் செய்து விட்டீர்களா? இந்த பள்ளிக்கூட வாசலில் உள்ள குப்பைத்தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும். இதுகுறித்து இன்றைக்குள் தொட்டியை அகற்றிய போட்டோவை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நகராட்சி அலுவலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
பின்னர் ராஜபாளையம் நகராட்சி அலுவலர்கள் குப்பைத்தொட்டி அகற்றி அதற்கான படத்தையும் அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : 'ஐ லவ் ஆவடி' - மக்களுடன் அமைச்சர் செல்ஃபி