நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் தங்களால் முடிந்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பல தன்னார்வலர்கள், சிறுவர்கள் உள்பட பலர் ஆர்வமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரயில்வே ஊழியர்களும், அலுவலர்களும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் கோட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய ஐந்து நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுவரை மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் சார்பாக ரூபாய் 95 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில், பயணிகள் ரயில் என்ஜின் ஓட்டுநர் ஜேம்ஸ் செல்வராஜ், ரூ.1 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உட்பட அலுவலர்கள், ஊழியர்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: மது குடித்தால் கரோனாவா? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்