மதுரை பழங்காநத்தம் சாலையில் மத்திய சேமிப்பு கிடங்கு அருகே, பள்ளம் தோண்டப்பட்டது. இதை சரியாக முடாததால் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், மீட்பு வாகனம் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.
அப்போது சம்பவ இடத்தில் பணியிலிருந்த மதுரை தெற்கு போக்குவரத்து தலைமை காவலர்கள் காளிமுத்து, அருண்குமார் ஆகியோர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் இணைந்து பள்ளத்தை மண் வெட்டியால் சீரமைத்தனர். இதனால் குண்டும் குழியுமாக இருந்த அந்தச் சாலை சீரானது.
தங்களின் பணிச்சுமைக்கிடையிலும் பொதுநலன் கருதி சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்களுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். காவலர்கள் சாலையை சீரமைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: ’நீங்க மட்டும்தான் இங்கிலீஸ் பேசுவீங்களா நாங்களும் பேசுவோம்’ - அரசுப் பள்ளி மாணவர்கள்