மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல் வணிக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது, பூ மார்க்கெட். இங்கு பல்வேறு வகையான பூக்கள் வாடிப்பட்டி, சோழவந்தான், பாலமேடு, திருமங்கலம், சிலைமான், பூவந்தி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக, இப்பகுதியில் விளைவிக்கப்படும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி, வெளி மாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. அதன் தரம், மணம் ஆகியவற்றின் காரணமாக மதுரை மல்லிகைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
அதன் அடிப்படையில், மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கிச் சிறப்பித்துள்ளது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கிலோ ரூ.1,200 வரை விற்பனையான மதுரை மல்லிகை, இன்று கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பிச்சி ரூ.400, முல்லை ரூ.400, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150, செண்டு மல்லி ரூ.70, நாட்டு சம்பங்கி ரூ.200, ஹைபிரிட் சம்பங்கி ரூ.80 என விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.