மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது. இதேபோல குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்வை நடத்தவேண்டும்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான வழக்கையும் முறையாக விசாரித்து தீர்வு காண வேண்டும். இந்த வழக்கு விசாரணைகளில் இதுவரை கீழ்மட்ட அதிகாரிகளும், அலுவலர்களுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே டிஎன்பிஎஸ்சியின் அனைத்து நிலைகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து கே.கே. ரமேஷும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது குறித்து தமிழ்நாடு தலைமை செயலர், சிபிஐ, டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.