திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,
மனுவில், "தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நல்லமனார் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்நிலையில் அதிமுகவினர் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு அரசின் சார்பாக பொங்கல் பரிசு கொடுத்து தாங்கள் சொல்லும் நபருக்குத்தான் வாங்களிக்க வேண்டும் என மக்களிடம் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
மேலும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டாலும் அதை ஒரே பெட்டியில் போடுவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதுடன் வாக்குச் சீட்டுகளை பிரிப்பதில் நேரமும் விரயமாகிறது.
இதனால் தேர்தலில்போது வாக்களித்த சீட்டுகளை போடுவதற்கு தனித்தனி பெட்டிகளை வைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கிவரும் பொங்கல் பரிசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும், தேர்தல் நடக்கக்கூடிய 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதித்துள்ளதாகவும், தேர்தலின்போது வாக்களித்த வாக்குச்சீட்டுகளைப் போடுவதற்கு தனித்தனி பெட்டிகளை வைக்கக்கோரிய மனுவில் அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தை அணுகக்கோரி வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!